ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை; Concussion Substitute என்றால் என்ன?
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஷதாப் கான் காயம் காரணமாக பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவர் மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின் மருத்துவக் குழு சோதனை செய்து, அவர் மீண்டும் களமிறங்க முடியாது என அறிவித்துவிட்டது. இதையடுத்து மாற்று வீரராக உசாமா மிர் களமிறங்கிய நிலையில், அவர் வழக்கமான மாற்று வீரராக இல்லாமல் "Concussion Substitute" ஆக களமிறங்கினார். Concussion Substitute விதியின்படி உசாமா மிர்ருக்கு பந்துவீசும் வாய்ப்பும் கிடைத்தது. மேலும் அவர் இதில் 8 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
Concussion Substitute என்பது என்ன?
வழக்கமாக கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேற நேர்ந்தால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் விளையாடும் லெவனில் சேர்த்துக் கொள்ளப்படுவார். எனினும், அவருக்கு பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதி இருந்து வந்த நிலையில், 2016இல் Concussion Substitute எனும் புதிய விதியை நியூசிலாந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஐசிசி சர்வதேச கிரிக்கெட்டில் இதை அறிமுகம் செய்தது. இந்த விதியின்படி மாற்று வீரராக களமிறங்கும் வீரருக்கு மற்ற வழக்கமான வீரர்களை போல பேட்டிங் மற்றும் பந்துவீசும் வாய்ப்பும் வழங்கப்படும். எனினும், இந்த விதியின்படி ஒரு பேட்ஸ்மேனுக்கு மாற்றாக பவுலரையோ அல்லது ஆல் ரவுண்டரையோ களமிறக்க முடியாது என்பது போன்ற கட்டுப்பாடுகளும் உள்ளன.