LOADING...
36 ஆண்டுகால ஃபிஃபா உலகக்கோப்பை தாகம் தீர்ந்தது! ஹெய்தி அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து வரலாற்று வெற்றி
36 ஆண்டுகால உலகக்கோப்பை தாகம் தீர்ந்தது! ஹெய்தி அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி

36 ஆண்டுகால ஃபிஃபா உலகக்கோப்பை தாகம் தீர்ந்தது! ஹெய்தி அணியை வீழ்த்தி ஸ்காட்லாந்து வரலாற்று வெற்றி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 14, 2026
05:37 pm

செய்தி முன்னோட்டம்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சி பிரிவில் சனிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஸ்காட்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஹெய்தி அணியை வீழ்த்தியது. இதன் மூலம் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் தனது 36 ஆண்டுகால நீண்ட காலக் காத்திருப்புக்கு ஸ்காட்லாந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்பொழுது உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணிக்கு, 1990 இத்தாலி உலகக்கோப்பையில் ஸ்வீடன் அணியை வீழ்த்தியதே இறுதி வெற்றியாக இருந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் பயிற்சியாளர் ஸ்டீவ் கிளார்க்கின் ஸ்காட்லாந்து அணி தற்பொழுது தனது பிரிவில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அசாத்திய கோல்

முதல் பாதியில் ஜான் மெக்கின் அடித்த அசாத்திய கோல்

அமெரிக்காவின் ஜில்லெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்பம் முதலே ஸ்காட்லாந்து வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். போட்டியின் 28வது நிமிடத்தில் ஸ்காட்லாந்து அணியின் நட்சத்திர வீரர் சே ஆடம்ஸ் அடித்த பந்தை ஹெய்தி கோல்கீப்பர் தடுத்தார். ஆனால், அவரிடமிருந்து நழுவி வந்த பந்தை ஸ்காட்லாந்தின் நடுகள வீரர் ஜான் மெக்கின் மிகச் சரியாகக் கணித்து கோலாக மாற்றினார். இந்த அரிய கோல் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் ஸ்காட்லாந்து அணிக்காகக் கோல் அடித்த மிக வயதான வீரர் என்ற புதிய சாதனையையும் ஆஸ்டன் வில்லா கிளப் அணியின் வீரரான மெக்கின் படைத்தார்.

துடுப்பாட்டம்

ஹெய்தி அணியின் கடுமையான பதிலடியும் தடுப்பாட்டமும்

முன்னிலை பெற்ற உற்சாகத்தில் ஸ்காட்லாந்து அணி தனது இரண்டாவது கோலை அடிக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டது. பென் டோக் வழங்கிய கிராஸ் பந்தை லாரன்ஸ் ஷாங்க்லாண்ட் ஹெடராக மாற்ற முயன்ற போதிலும் அது நூலிழையில் தவறியது. மறுபுறம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உலகக் கோப்பை மேடைக்குத் திரும்பியுள்ள ஹெய்தி அணி, ஸ்காட்லாந்து வீரர்களுக்குக் கடுமையான சவாலை அளித்தது. ஹெய்தி வீரர் ரூபன் ப்ரோவிடென்ஸ் அடித்த சக்திவாய்ந்த பந்தை ஸ்காட்லாந்து கோல்கீப்பர் அங்கஸ் கன் நழுவவிட்ட போதும், சக டிஃபெண்டர்கள் பந்தை உடனடியாக வெளியேற்றி அணியை ஆபத்திலிருந்து காப்பாற்றினர்.

Advertisement

போட்டியில் பரபரப்பு

இரண்டாவது பாதியில் நீடித்த பரபரப்பான இறுதி நிமிடங்கள்

போட்டியின் இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் பெரிய அளவில் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் ஹெய்தி அணி ஆக்ரோஷமாக விளையாடிப் போட்டியைச் சமன் செய்யத் தீவிரமாகப் போராடியது. அந்த அணியின் வில்சன் இசிடோர் மற்றும் பிரான்ட்ஸ்மேன் பியரோட் ஆகியோர் அடித்த பந்துகள் கோல் கம்பத்திற்கு மிக அருகில் சென்று வெளியேறின. உலகக்கோப்பை வரலாற்றில் தனது முதல் புள்ளியைப் பெற ஹெய்தி அணி இறுதிவரை போராடிய போதிலும், ஸ்காட்லாந்து அணியின் பலமான தடுப்பாட்ட அரணை அவர்களால் கடைசி வரை தகர்க்க முடியவில்லை.

Advertisement

சவால்கள்

பிரேசில் மற்றும் மொராக்கோ அணிகளுடனான அடுத்தகட்ட சவால்கள்

குரூப் சி பிரிவில் நேற்று நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில் ஐந்து முறை உலக சாம்பியனான பலம் வாய்ந்த பிரேசில் அணி, மொராக்கோ அணியுடன் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடித்து அதிர்ச்சியளித்தது. தற்பொழுது குரூப் சி பிரிவில் ஸ்காட்லாந்து 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பிரேசில் மற்றும் மொராக்கோ தலா 1 புள்ளியுடனும் உள்ளன. ஸ்காட்லாந்து அணி தனது அடுத்த லீக் போட்டியில் ஜூன் 19 அன்று மொராக்கோவை எதிர்கொள்ள உள்ளது. உலகக்கோப்பையில் தனது முதல் வெற்றியைத் தவறவிட்ட ஹெய்தி அணி தனது அடுத்த போட்டியில் பிரேசிலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது.

Advertisement