விசா மற்றும் பார்ஸ்போர்ட் குளறுபடி; மருத்துவர், மேலாளர் இல்லாமல் வெளிநாடு சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
விசா மற்றும் பாஸ்போர்ட் பிரச்சினைகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மருத்துவர் இல்லாமலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள 19 வயதுக்குட்பட்ட அணி மேலாளர் இல்லாமலும் போட்டியில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்கும் தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவராக அறிவிக்கப்பட்ட சொஹைல் சலீம் இன்னும் அணியில் சேரவில்லை. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்களில் கூறுகையில், "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்னும் டாக்டர் சலீமுக்கு விசா பெற முயற்சிக்கிறது. அது வந்தவுடன் அவர் ஆஸ்திரேலியாவில் பெர்த்தில் நடக்கும் முதல் டெஸ்டில் அணியில் சேருவார்." என்று தெரிவித்துள்ளனர்.
யு19 அணி மேலாளருக்கு என்ன சிக்கல்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் ஜூனியர் அணியின் மேலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் சோயப் முகமதுவும் அணியுடன் இணைய முடியவில்லை. சோயப் காலாவதியான பாஸ்போர்ட் வைத்திருந்ததுதான் இதற்கு காரணம் எனக் கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அவர் விரைவில் துபாயில் அணியுடன் இணைவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. இதற்கிடையே, ஆஸ்திரேலியாவுக்கான பாகிஸ்தான் அணியில் அப்ரார் அகமதுவுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட ஆஃப் ஸ்பின்னர் சஜித் கானும் கூட விசா சிக்கல்கள் காரணமாக அங்கு செல்வது தாமதமானது குறிப்பிடத்தக்கது.