பயிற்சியாளராக செயல்படுவதில் உள்ள கஷ்டங்கள் : மனம் திறந்த ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த 20 மாதங்களில், ராகுல் டிராவிட் வெற்றிகளை விட தோல்வியையே அதிகம் பெற்றுள்ளார். ஆசியக் கோப்பை, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து டெஸ்ட், டி20 உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என அடுக்கடுக்காக தோல்வியை சந்தித்துள்ளார். எனினும், அவருக்கு முன்னர் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியை விட அவர் சிறப்பாகச் செய்த ஒரு விஷயம், வீரர்களுக்கு நீண்ட காலம் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தற்போது டெத் ஓவர்களில், அர்ஷ்தீப் சிங், இந்தியாவின் கோ-டூ பவுலராக மாறியுள்ளார். அதே நேரத்தில் கில், இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரராக உருமாறியுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக நீக்கப்பட்டிருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும்போது சரியாக திறமையை நிரூபித்துள்ளார்.
பயிற்சியாளர் பொறுப்பு குறித்து ராகுல் டிராவிட் பேட்டி
கிரெட் க்யூரியஸ் நிகழ்ச்சியில் குணால் ஷாவிடம் பேசிய ராகுல் டிராவிட், ஒரு பயிற்சியாளராக வெற்றி, தோல்வி என்ற எல்லைக்கு அப்பால், ஒரு கடினமான பகுதி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய டிராவிட், "ஒவ்வொரு முறையும் நாங்கள் விளையாடும் லெவனை தேர்ந்தெடுக்கும்போது, வாய்ப்பு கிடைக்காத மற்றவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கிறோம். விளையாடாத மற்றவர்கள் இருக்கிறார்கள்". "ஒவ்வொரு முறையும் நாங்கள் ஒரு போட்டிக்கு 15 பேரைத் தேர்ந்தெடுக்கும்போது, தாங்களும் இடம் பெறவேண்டும் என நினைக்கும் பலர் இருக்கிறார்கள்". "அந்த சமயங்களில் உணர்ச்சியுடன் முடிவெடுக்காமல், உண்மையிலேயே வெற்றிபெற ஏதுவான ஒரு அணியை தேர்வு செய்ய வேண்டிய நெருக்கடியில் உள்ளோம். இது மிகவும் கடினமானது." என்று கூறினார்.