ENGvsSL : ஒருநாள் உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (அக்டோபர் 26) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை இங்கிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோ 30 ரன்களும், டேவிட் மாலன் 28 ரன்களும் எடுத்த நிலையில், அவுட்டாகி வெளியேற, அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் கடைசி வரை போராடி 43 ரன்கள் சேர்த்த நிலையில், 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு சுருண்டது. இது ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும்.
பாதும் நிசங்க - சதீரா சமரவிக்ரம அதிரடியால் இலங்கை வெற்றி
157 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான குஷால் பெரேரா 4 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து குஷால் மெண்டீஸும் 11 ரன்களில் வெளியேறினாலும், பாதும் நிசங்க மற்றும் சதீரா சமரவிக்ரம நிலைத்து நின்று அரைசதம் அடித்து அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இலங்கை அணி 24.5 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பாதும் நிசங்க 77 ரன்களும், சதீரா சமரவிக்ரம 65 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் இலங்கை அணி நடப்பு உலகக்கோப்பையில் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. மறுபுறம் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து நான்காவது தோல்வியை பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது.