17 ஆண்டுகால சாபம் நீங்கியது! டி2ஓ உலகக்கோப்பையில் ஐரோப்பிய அணிகளிடம் தோற்று வந்த இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை 2026 லீக் போட்டியில், இங்கிலாந்து அணி ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஒரு ஐரோப்பிய அணியை வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும். கடந்த 17 ஆண்டுகளாக நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து போன்ற ஐரோப்பிய அணிகளிடம் தோல்வியைத் தழுவி வந்த இங்கிலாந்து, ஒருவழியாக அந்தத் தடையை உடைத்துள்ளது.
சவால்
ஸ்காட்லாந்தின் சவாலான இலக்கு
முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணி, ஆரம்பத்தில் தடுமாறினாலும் கேப்டன் ரிச்சி பெரிங்டனின் அதிரடியான ஆட்டத்தால் மீண்டது. அவர் 32 பந்துகளில் 49 ரன்கள் குவித்து அரைசதத்தைத் தவறவிட்டார். அவருக்குத் துணையாக டோம் புரூஸ் மற்றும் மைக்கேல் ஜோன்ஸ் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். இதனால் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் லியாம் டாசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
சறுக்கல்
இங்கிலாந்தின் ஆரம்பக்கட்ட சறுக்கல்
153 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கிப் பயணித்த இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான பில் சால்ட் (2 ரன்கள்) மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் (3 ரன்கள்) ஆகிய இருவருமே முதல் 2 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். 13 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்ட இங்கிலாந்து அணிக்கு, மீண்டும் ஒரு ஐரோப்பிய அணியிடம் தோற்றுவிடுவோமோ என்ற பயம் ரசிகர்களிடையே ஏற்பட்டது.
மீட்பு
டோம் பான்டனின் அதிரடி மீட்பு
நான்காவது வரிசையில் களம் இறங்கிய டோம் பான்டன், இக்கட்டான சூழலைச் சாமர்த்தியமாக கையாண்டார். அவர் 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் குவித்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். ஜேக்கப் பெத்தேல் (32 ரன்கள்) மற்றும் சாம் கர்ரன் (28 ரன்கள்) ஆகியோருடன் அவர் அமைத்த முக்கியமான கூட்டணிகள் இங்கிலாந்து அணியை மீட்க உதவின. இறுதியில் வில் ஜாக்ஸ் சிக்ஸர் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
புள்ளிப்பட்டியல்
புள்ளிப்பட்டியல் மற்றும் அடுத்த ஆட்டம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியிடம் தோல்வியடைந்திருந்த இங்கிலாந்து அணிக்கு, இந்தப் போட்டி ஒரு வாழ்வா-சாவா போராட்டமாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி குரூப் சி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இருப்பினும், சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற வேண்டுமானால், பிப்ரவரி 16 ஆம் தேதி நடைபெறும் இத்தாலிக்கு எதிரான கடைசிப் போட்டியில் இங்கிலாந்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளது.