
INGvsENG 2வது டெஸ்ட்: பெரிய ஸ்கோர் அடித்தும் மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து
செய்தி முன்னோட்டம்
எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பேட்டிங் யூனிட் மோசமான காரணத்திற்காக அதன் பெயரை சாதனை புத்தகங்களில் பொறித்துள்ளது. இந்தியா முதல் இன்னிங்ஸில் மொத்தமாக 587 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 407 ரன்களை எடுத்தது. ஆனால் டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் தேவையற்ற முதல் இடத்தைப் பிடித்தது. அதாவது ஆறு பேட்ஸ்மேன்கள் டக்கவுட் ஆகி ஆட்டமிழந்து, 400 ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெயரை இங்கிலாந்து பெற்றுள்ளது.
ஃபாலோ-ஆன்
ஃபாலோ-ஆன் போராட்டத்தில் இருந்து மீண்ட இங்கிலாந்து
முன்னதாக, ஃபாலோ-ஆன் அச்சுறுத்தலுடன் இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் இருந்தபோது ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் விதிவிலக்கான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டெடுத்தனர். இந்த ஜோடி 303 ரன்களை கூட்டாக எடுத்தது. ஜேமி ஸ்மித் 184 ரன்கள் எடுத்து, டெஸ்ட் போட்டிகளில் ஒரு இங்கிலாந்து விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ஸ்கோராக புதிய சாதனை படைத்தார். அதே நேரத்தில் ஹாரி ப்ரூக்க்கும் 158 ரன்கள் எடுத்தார். இருப்பினும், மற்ற வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதற்கிடையே மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து 244 ரன்கள் முன்னிலை பெற்றது.