LOADING...
டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்; இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து

டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள்; இந்தியாவின் சாதனையை முறியடித்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி

எழுதியவர் Sekar Chinnappan
Sep 13, 2025
10:07 am

செய்தி முன்னோட்டம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. ஓல்ட் ட்ராஃபோர்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 304 ரன்கள் குவித்து, முழு உறுப்பினர் அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த அணியாக சாதனை படைத்தது. முன்னதாக, முழு உறுப்பினர் நாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்களாதேஷிற்கு எதிராக 297 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 எனச் சமன் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸ், தொடக்க ஆட்டக்காரர்களான ஃபில் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் வலுவடைந்தது.

மூன்றாவது அணி

ஒட்டுமொத்தமாக மூன்றாவது அணி

ஃபில் சால்ட் 141 ரன்களும், ஜோஸ் பட்லர் 83 ரன்களும் எடுத்து, இங்கிலாந்து அணி 300 ரன்களைக் கடக்க உதவினார்கள். இதன் மூலம், டி20 கிரிக்கெட் போட்டியில் 300 ரன்களைக் கடந்த மூன்றாவது அணியாகவும் இங்கிலாந்து மாறியுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணி ஒரு மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது. அதாவது ஒரு டி20 போட்டியில் 300 க்கும் மேற்பட்ட ரன்களை விட்டுக் கொடுத்த முதல் முழு உறுப்பினர் அணி என்ற பெயரை அது பெற்றுள்ளது. 305 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா அணி, 158 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.