நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: குடியரசுத் தலைவர் உரையுடன் முதல் அமர்வு
செய்தி முன்னோட்டம்
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டம்: ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13 வரை. இரண்டாம் கட்டம்: மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை. மொத்தம் 30 அமர்வுகளை கொண்ட இந்த கூட்டத்தொடரில், பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
அனைத்துக்கட்சி கூட்டம்
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் அனைத்துக்கட்சி கூட்டம்
கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்துப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை முன்வைத்தனர். மறுபுறம், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் தங்களது வியூகங்களை வகுத்துள்ளன. குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டம் (MGNREGA), லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் விவகாரங்கள், சுற்றுச்சூழல் சிக்கல்கள் மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கை குறித்து அரசைக் கேள்வி கேட்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.