டெஸ்ட் கிரிக்கெட் 5 லட்சம் ரன்கள்; வரலாற்றில் யாரும் எட்டமுடியாத சாதனை படைத்தது இங்கிலாந்து
வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியது. மேலும், ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து 378/5 என்ற நிலையில் இருந்ததோடு, நியூசிலாந்தை விட 533 ரன்கள் முன்னிலை பெற்றது. முன்னதாக, நியூசிலாந்தை வெறும் 125 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 280 ரன்கள் எடுத்தது. கஸ் அட்கின்சனின் ஹாட்ரிக் மூலம் கடைசி மூன்று நியூசிலாந்து பேட்டர்களை அவுட்டாக்கினார். 2016இல் மொயீன் அலிக்கு பிறகு இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கஸ் அட்கின்சன் இதன் மூலம் பெற்றுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒட்டுமொத்தமாக, 5,00,000 ரன்களைத் தாண்டிய முதல் அணியாக மாறியது. அவர்களின் 1082வது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 4,28,868 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 2,78,751 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் 1877 முதல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஆஸ்திரேலியா தற்போதுவரை 868 போட்டிகளில் மட்டுமே விளையாடி ஒப்பீட்டளவில் இங்கிலாந்தை விட குறைவாக உள்ளது. அதே நேரம், 1932 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இந்தியா, இதுவரை 586 போட்டிகளில் விளையாடியுள்ளது.