ரவி பிஷ்னோயை பின்னுக்குத் தள்ளி ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் அடில் ரஷித், புதன்கிழமை (டிசம்பர் 20) ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். மூத்த வீரர் ரஷித் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய இருவரும் கூட்டாக முதலிடத்தில் இருந்த நிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், அடில் ரஷித் 715 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸில் நடந்து முடிந்த நான்கு போட்டிகளில், 6.43 என்ற எகானமியில் அவர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு தசாப்தத்திற்கு பிறகு மீண்டும் முதலிடம் பிடித்த இங்கிலாந்து வீரர்
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் சிறந்த தரவரிசைப் பந்துவீச்சாளராக இருந்த கிரேம் ஸ்வானுக்குப் பிறகு பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் ரஷித் பெற்றார். முன்னதாக, இயான் மோர்கன் மற்றும் ஜோஸ் பட்லருக்குப் பிறகு 100 டி20 போட்டிகளில் விளையாடிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது. டி20 கிரிக்கெட்டில் மொத்தமாக 279 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித், எட்டு இன்னிங்ஸ்களில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 7.48 என்ற எகானமியில் 314 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்கிடையில், ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடம் பிடித்தும், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் அவரை வாங்க எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.