"இதெல்லாம் தவறான செயல்" : ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், தற்போது நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிடும் விதம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் சிலர் முறையற்ற கருத்துக்களை வெளியிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, பல்வேறு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை பயன்படுத்தப்பட்ட பிட்ச்களைப் பற்றி தொடர்ந்து பேசி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய ஊடகங்கள், நாக்பூர் ஆடுகளத்தை மோசமானது என்று வர்ணித்தது முதல் இந்தியாவை பிட்ச் டாக்டரிங் என்று குற்றம் சாட்டுவது வரை தொடர்ந்து எதிர்மைறையாகவே செய்தி வெளியிட்டு வந்தன. இது கவாஸ்கரை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் எதிர்மறை பிரச்சாரம் குறித்து கவாஸ்கர் கருத்து
இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் கவாஸ்கர் கூறியிருப்பது பின்வருமாறு :- இந்தியாவில் விளையாடுவது மற்றும் கேப்டனாக செயல்படுவதை ரசிப்பதாக ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார், ஏனெனில் ஒவ்வொரு பந்து வீச்சும் சவாலானது, ஒவ்வொரு ஓவருக்கும் தன்மை மிக விரைவாக மாறும். ஆனால் சில முன்னாள் வீரர்களிடமிருந்து வரும் கருத்துக்கள் அருவருக்கத்தக்க வகையில் உள்ளது. இதை ஆஸ்திரேலிய ஊடகங்களும் தூபம் போட்டு வளர்க்கின்றன. வெளிநாட்டிற்கு வரும்போது சொந்த மண்ணில் இருப்பதுபோல் ஆடுகளம் கிடைக்காது என்பதை ஏற்றுக்கொண்டு விளையாடுங்கள், ஆனால் இந்தியர்களின் நேர்மையை சந்தேகிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். நான் பெருமைமிகு இந்தியன். இந்தியர்களை சந்தேகித்தால் உரிய பதிலடி கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.