SL vs AFG முதல் ஒருநாள் போட்டி : 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி!
மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடரின் முதல் போட்டியில் ஆப்கான் கிரிக்கெட் அணி இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கையின் ஹம்பன்தோட்டா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானின்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் அசலங்கா அதிகபட்சமாக 91 ரன்களும், தனஞ்சய டி சில்வா 51 ரன்களும் எடுத்தனர். ஆப்கான் பந்துவீச்சை பொறுத்தவரை ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் ஃபரித் அகமது அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆப்கானிஸ்தான் பேட்டிங் அபாரம்
269 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கான் கிரிக்கெட் அணி 46.5 ஓவர்களிலேயே வெறும் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ஆப்கான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான் அபாரமாக விளையாடி 98 ரன்கள் குவித்தார். மேலும் ரஹ்மத் ஷா 55 ரன்களும், ஹஷிமல்லாஹ் ஷாஹிதி 38 ரன்களும், முகமது நபி 27 ரன்களும் எடுத்ததால் எளிதாக இலக்கை எட்டியது. இதன் மூலம் இலங்கையில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டாவது முறையாக தொடரின் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முன்னதாக 2022யிலும் இதேபோல் வெற்றி பெற்றிருந்தது. எனினும் அந்த தொடரை 1-1 என சமன் செய்த நிலையில், இந்த முறை தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது.