சென்னையை கலக்கும் 'தோனி ஸ்போர்ட்ஸ்'? சிஎஸ்கே கேப்டன் விசிட் அடிப்பாரா என எதிர்பார்ப்பு!
ஐபிஎல் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடக்கும் சேப்பாக்கம் மைதானத்தில், மே 23 அன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையேயான குவாலிஃபையர் 1 மோதல் நடக்க உள்ளது. இதற்காக ஊழியர்கள் தீவிரமாக அனைத்தையும் தயார் செய்து வருகின்றனர். சேப்பாக்கம் மைதானத்தின் அருகே பல விளையாட்டு தொடர்பான கடைகள் இருந்தாலும், அதில் தனித்து தெரிகிறது "தோனி ஸ்போர்ட்ஸ்". இது உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட கடையாக இல்லை என்றாலும், கடையின் தனித்துவமான பெயரால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. தற்போது ஐபிஎல் சீசன் என்பதால் சிஎஸ்கே ஜெர்சிகளை வாங்க ரசிகர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
'தோனி ஸ்போர்ட்ஸ்' முகமது ஆரிஃப் சொல்வது என்ன?
10 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட இந்த கடையின் மேலாளர் முகமது ஆரிஃப், தனது ஒட்டுமொத்த குடும்பமும் எம்எஸ் தோனியின் ரசிகர் என்றும், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பிடித்தமானவராக தோனி உள்ளதால் அவரது பெயரையே கடைக்கு வைத்துள்ளார். தோனி அந்த வழியாக மைதானத்திற்கு சென்று வரும்போது தங்கள் கடையை பார்த்திருக்கலாம் என தெரிவித்த ஆரிஃப், இருந்தாலும் அவர் ஒருமுறை கூட கடைக்கு வந்ததில்லை என வருத்தப்பட்டார். பெரியவர்கள் மட்டுமல்லாது தற்போதைய சிறுவர்கள் கூட தோனியின் ஜெர்சியை விரும்புவதாக தெரிவித்துள்ள ஆரிஃப், தலைமுறைகளை தாண்டியும் தோனிக்கு வரவேற்பு கூறினார். மற்ற ரசிகர்களை போலவே அவரும், தோனி நிச்சயம் இந்த சீசனோடு விடைபெற மாட்டார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.