டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்கள் : புதிய மைல்கல்லை எட்டிய தனஞ்சய டி சில்வா
நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா 3,000 ரன்களை கடந்தார். இந்த போட்டியில் தனஞ்சய டி சில்வா185 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரும் அடங்கும். வெறும் 2 ரன்களில் தனது 10வது டெஸ்ட் சதத்தை தவறவிட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 580 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது. அடுத்து ஆடிய இலங்கை முதல் இன்னிங்சில் 164 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் 358 ரன்களுக்கு இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனஞ்சய டி சில்வாவின் புள்ளி விபரங்கள்
ஈஎஸ்பிஎன்கிரிக்இன்போவின் படி, 31 வயதான டி சில்வா தனது 47 வது டெஸ்டில் 3,000 ரன்களை கடந்து, இந்த மைல்கல்லை எட்டிய 15 வது இலங்கை வீரர் ஆனார். டி சில்வா தற்போது டெஸ்டில் 38.53 என்ற சாராசியில் 3,006 ரன்களை எடுத்துள்ளார். இதில் ஒன்பது சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் அடங்கும். மேலும் தனது ஆஃப் ஸ்பின் மூலம் இதுவரை 55.26 சராசரியில் 34 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கிடையே இந்த போட்டியில் விளையாடிய தினேஷ் சண்டிமால் இலங்கை ஜாம்பவான் அர்ஜுன் ரணதுங்காவை பின்னுக்குத் தள்ளி டெஸ்டில் அதிக ரன் குவித்த 10வது இலங்கை வீரர் என்ற சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.