ஐபிஎல் 2026: சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்தார் டெவான் கான்வே
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலைச் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சனிக்கிழமை (நவம்பர் 15) வெளியிடும் எனக் கூறப்படும் நிலையில், நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே தாம் அணியிலிருந்து விடுவிக்கப்படுவதை உறுதி செய்துள்ளார். சிஎஸ்கே ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து டெவான் கான்வே தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். "சிஎஸ்கேவின் விசுவாசமான ரசிகர்கள் அனைவருக்கும் மூன்று ஆண்டுகள் அளித்த அற்புதமான ஆதரவுக்கு நன்றி." என்று டெவான் கான்வே தனது பதிவில் தெரிவித்துள்ளார். டெவான் கான்வே 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அறிமுகமானார்.
புள்ளி விபரங்கள்
டெவான் கான்வேவின் சிஎஸ்கே புள்ளி விபரங்கள்
தனது 2022 அறிமுக சீசனில் 42 சராசரியில் 252 ரன்கள் எடுத்தார். எனினும், 2023 சீசனில் அவர் அபாரமாக விளையாடி, 6 அரை சதங்களுடன் 672 ரன்கள் குவித்து, அந்த சீசனில் அதிக ரன் எடுத்தவர்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். ஐபிஎல் 2024 சீசன் முழுவதும் காயத்தால் விலகியிருந்த கான்வே, கடந்த மெகா ஏலத்தில் ₹6.25 கோடிக்கு மீண்டும் சிஎஸ்கேவால் வாங்கப்பட்டார். ஆனால், 2025 சீசனில் ஆறு இன்னிங்ஸ்களில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐபிஎல் 2025இல் சிஎஸ்கே அணி ஏமாற்றம் அளித்ததால், நிர்வாகம் அணி கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
விடுவிப்பு
பல வீரர்களை விடுவிக்க திட்டம்
டெவான் கான்வேவைத் தவிர, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரும் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரைச் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்வதற்கான (அதிகாரப்பூர்வமற்ற) பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, ஐபிஎல் 2026 சீசனில் சிஎஸ்கே முற்றிலும் புதிய தோற்றத்துடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.