
18 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நேர்ந்த சோகம்
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (மே 21) அன்று வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸிடம் 59 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஐபிஎல் 2025 தொடரை ஏமாற்றத்துடன் முடித்துள்ளது.
இதனால் அவர்கள் பிளேஆஃப் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டனர்.
இதன் விளைவாக மும்பை அணி, குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுடன் இணைந்து பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதற்கிடையே, ஐபிஎல் வரலாற்றில் இந்த வெளியேற்றம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மிக மோசமான வரலாற்று சாதனையாக மாறியுள்ளது.
அதாவது, 18 வருட ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளுடன் ஒரு சீசனைத் தொடங்கிய பிறகு பிளேஆஃப்களைத் தவறவிட்ட முதல் அணி என்ற சோக சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.
விபரங்கள்
கூடுதல் விபரங்கள்
டெல்லி கேப்பிடல்ஸ் அணி இந்த சீசனில் அக்சர் படேலின் தலைமையின் கீழ் ஆரம்பத்தில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அவர்களின் முதல் நான்கு போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றதோடு, முதல் எட்டு போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்றது.
இதனால், டெல்லி கேப்பிடல்ஸ் நிச்சயம் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஐந்து ஆட்டங்களில் நான்கு தோல்வி மற்றும் மழையால் ஒரு போட்டி ரத்து காரணமாக பரிதாப நிலைக்குச் சென்றது.
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளுடன் ஒரு சீசனைத் தொடங்கிய ஏழாவது அணி என்ற பெருமையை டெல்லி கேப்பிடல்ஸ் பெற்றாலும், மற்ற ஆறு அணிகளைப் போலல்லாமல், பிளேஆஃப் வாய்ப்பை இழந்து வேறு ஒரு வரலாறு படைத்துள்ளது.