எது வெற்றிகரமான அணி? ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத இந்தியா குறித்து டேரன் சமி கருத்து
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி, இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்தாலும், 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாதது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. ஊடகவியலாளர் விமல்குமாரின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய டேரன் சமி, சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் அபாரமாக செயல்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பாராட்டியுள்ளார். மேலும், அவரது பின்னணி குறித்து பேசிய டேரன் சமி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வீரர்களின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டின் நிலை ஆகியவற்றைப் பாராட்டினார்.
ஷுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சனை பாராட்டிய டேரன் சமி
இந்திய அணி உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக இருந்தாலும், 10 ஆண்டுகளாக எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியவில்லை. இதுகுறித்து விமல் குமார் டேரன் சமியிடம் கேட்டபோது, இந்தியாவால் ஹர்திக் பாண்டியா, ஜெய்ஸ்வால் போன்ற பல சிறந்த வீரர்களை உருவாக்க முடியும்போது, சர்வதேச போட்டியில் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை என்ற பேச்சை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். பிசிசிஐ இந்திய கிரிக்கெட் மட்டுமல்லாது சர்வதேச கிரிக்கெட்டிற்கு பல சிறந்த வீரர்களை தயார் செய்து வழங்கியுள்ளதால், உண்மையில் இந்திய அணி தான் வெற்றிகரமான அணி என அவர் மேலும் கூறினார். மேலும், தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஷுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் தன்னை கவர்ந்த வீரர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.