4 வயதில் கையை இழந்தவர், காமன்வெல்த்தில் 100 மீட்டர் பாரா ஓட்டத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை
செய்தி முன்னோட்டம்
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG 2026), ஆண்களுக்கான 100 மீட்டர் T47 பாரா தடகள பிரிவில் இந்திய வீரன் திலீப் காவித் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மழை பெய்த ஈரமான ஓடுதளத்தில் தனது அபார திறமையை வெளிப்படுத்திய 22 வயதான திலீப், 10.71 வினாடிகளில் இலக்கைக் கடந்து காமன்வெல்த் சாதனையை முறியடித்துப் புதிய சாதனை படைத்தார். காமன்வெல்த் போட்டிகளில் பாரா தடகள பிரிவில் தங்கம் வெல்லும் முதல் இந்திய ஆண் தடகள வீரன் என்ற வரலாற்றுச் சிறப்பையும் இவர் இதன்மூலம் பெற்றுள்ளார். இப்போட்டியில் மற்றொரு இந்திய வீரரான முகமது பேசில் 10.83 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றது இந்தியாவிற்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்துள்ளது.
கடந்து வந்த பாதை
வறுமை மற்றும் விபத்தை கடந்து வந்த பாதை
மஹாராஷ்டிராவின் நாசிக் அருகே உள்ள தொரன் தொங்கரி என்ற சிறிய கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் திலீப் காவித். தனது 4வது வயதில் மரத்தில் இருந்து கீழே விழுந்த விபத்தில் படுகாயமடைந்த இவருக்கு, சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் கை அகற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இருப்பினும், மனதளவில் சோர்வடையாத திலீப், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் மட்டுமின்றி, வழக்கமான விளையாட்டு வீரர்களுடனும் ஓடித் தனது திறமையை நிரூபித்தார்.
கிராமத்துப் போட்டியில் திலீப்பின் வேகத்தைக் கண்ட பயிற்சியாளர் வைஜநாத் தயானந்த் காலே, அவரை நாசிக்கிற்கு அழைத்துச் சென்று அனைத்துச் செலவுகளையும் ஏற்று முறையான பயிற்சி அளித்தார்.
பயிற்சியாளரின் வழிகாட்டுதலே திலீப்பை சர்வதேச தடகள வீரராக மாற்றியது.
சமர்ப்பணம்
"குரு பூர்ணிமா நாளில் எனது குருவுக்குச் சமர்ப்பணம்"
தங்கம் வென்ற பிறகு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த திலீப் காவித், "நான் ஒரு சிறிய கிராமத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தவன். எனது பயிற்சியாளர் தான் என்னை அடையாளம் கண்டு பயிற்சி அளித்தார். இன்று குரு பூர்ணிமா நாள் என்பதால், நான் வென்ற இந்தத் தங்கப் பதக்கத்தை எனது குருவுக்கு அன்பளிப்பாகச் சமர்ப்பிக்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.