ஐபிஎல் 2023 : சிசண்டா மகலா காயத்தால் நீக்கம்! சென்னை அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2023 இல் சென்னை சூப்பர் கிங்ஸின் அடுத்த மூன்று போட்டிகளில் சிசண்டா மகலா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் புதன்கிழமை (ஏப்ரல் 12) நடந்து முடிந்த போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வின் கேட்சை பிடிக்கும்போது மகலாவின் விரலில் காயம் அடைந்தார்.
சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கிடம், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் மகலா பற்றிய காயம் குறித்த அப்டேட் கேட்கப்பட்டது.
அப்போது மகலாவின் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், குறைந்தது அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவர் விளையாட முடியாது என்றும் ஃப்ளெமிங் உறுதிப்படுத்தினார்.
CSk big blow with player injury
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து விலகல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த இரண்டு வாரங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது சிசண்டா மகலா உட்பட மூன்று வீரர்கள் இந்த போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிய வந்துள்ளது. அதன்படி தீபக் சாஹர் சில வாரங்களுக்கு விளையாட மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் உடற்தகுதி தினசரி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனியும் காலில் காயம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிளேஆப் சுற்றுக்கு செல்வதற்கு அடுத்தடுத்த போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில், இது சிஎஸ்கேவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக உள்ளது.