சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்! தோனி மட்டும் இல்ல.. இவரும் இல்லையா? சிஎஸ்கேவிற்கு நேர்ந்த அடுத்த தலைவலி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பே ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்குக் காயங்கள் பெரும் சவாலாக மாறியுள்ளன. மார்ச் 30 ஆம் தேதி குவஹாத்தியில் நடைபெறவுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சிஎஸ்கே களம் காண உள்ளது. ஆனால், இந்தப் போட்டிக்கு முன்னதாக அணியின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்துக் காயத்தால் விலகி வருவது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
டெவால்ட் பிரெவிஸ்
டெவால்ட் பிரெவிஸ் விலகல் - பிளெமிங் உறுதி
தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் டெவால்ட் பிரெவிஸ், விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தொடக்க ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதி செய்துள்ளார். "பிரெவிஸ் தற்போது மறுவாழ்வு சிகிச்சையில் உள்ளார், நாளை நடைபெறும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார்" என்று சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்குப் பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Dewald Brevis is undergoing rehab for a side injury and will miss tomorrow’s game.
— Chennai Super Kings (@ChennaiIPL) March 29, 2026
Wishing him a speedy recovery! 🦁💛 pic.twitter.com/5SmTeaB7QH
தோனி
தோனி இல்லாத முதல் இரண்டு வாரங்கள்
அணியின் இதயமாகக் கருதப்படும் எம்எஸ் தோனி, தசைப்பிடிப்பு காரணமாக முதல் இரண்டு வாரப் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது ஏற்கனவே உறுதியாகியுள்ளது. அவர் தற்போது சென்னையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதால், குவஹாத்திக்கு அணியுடன் பயணம் செய்யவில்லை. தோனியின் அனுபவம் மற்றும் கேப்டன்சி ஆலோசனைகள் இல்லாதது களத்தில் சிஎஸ்கேவிற்கு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பந்துவீச்சு
பந்துவீச்சிலும் தொடரும் சிக்கல்கள்
சிஎஸ்கேவின் வேகப்பந்து வீச்சுத் துறையும் காயத்தால் சிதைந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ் ஹாம்ஸ்ட்ரிங் காயம் காரணமாக இந்த சீசன் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அறிவிக்கப்பட்ட ஸ்பென்சர் ஜான்சனும் தசை அழுத்தக் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவர் ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு முன்னதாக அணியில் இணைய வாய்ப்பில்லை. இதனால் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் இன்றி சிஎஸ்கே களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
2025
2025 தோல்விக்குப் பின் மீண்டு வருமா சிஎஸ்கே?
கடந்த 2025 ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு ஒரு மோசமான கனவாக அமைந்தது. பேட்டிங் சொதப்பல் மற்றும் சரியான டெத் ஓவர் பந்துவீச்சாளர்கள் இல்லாததால் அந்த அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியது. இந்த 2026 சீசனில் புதிய உத்வேகத்துடன் களம் காணத் திட்டமிட்டிருந்த நிலையில், தொடக்கத்திலேயே இத்தனை காயங்கள் ஏற்பட்டது அணி நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இருப்பினும், இளம் வீரர்களைக் கொண்டு சிஎஸ்கே இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.