
ஐபிஎல் 2025 ஒரே ஒரு போட்டியில் பல மோசமான சாதனைகளை படைத்தது சிஎஸ்கே; இத்தனை சோகங்களா?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான இரவுகளில் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி சந்தித்தது.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 11) அன்று எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு பல மோசமான சாதனைகளை படைத்தது.
தொடர் தோல்விகளை பெற்றுவந்த சிஎஸ்கே அணியில், ருதுராஜ் கெய்க்வாட் விலகி, எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றதால், அணி மீண்டு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், சிஎஸ்கே சொந்த மண்ணில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்ததால், அது நிராசையானது.
போட்டி
போட்டி ஹைலைட்ஸ்
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்களில் 103/9 ரன்களை மட்டுமே எடுத்தது. சிவம் துபே (31) மற்றும் விஜய் சங்கர் (29) மட்டுமே பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.
ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் மிகக் குறைந்த ஸ்கோர் இதுவாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த இலக்கை 10.1 ஓவர்களில் எட்டி எளிதாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் 9வது இடத்திற்கு பின்தங்கியது.
தொடர் தோல்வி
ஐந்து போட்டிகளில் தொடர் தோல்வி
இந்தப் போட்டியில் பெற்ற தோல்வி மூலம், சிஎஸ்கே அணி ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து மோசமான சாதனை செய்துள்ளது.
முன்னதாக, அந்த அணி தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களுக்கு மேல் தோல்வியடைந்ததில்லை.
2010 ஆம் ஆண்டும், 2022-23 சீசன்களில் இரண்டு முறையும் தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோற்றதே அதிகபட்சமாக இருந்தது.
மார்ச் 23 அன்று நடந்த மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான அவர்களின் கடைசி வெற்றிக்குப் பிறகு தற்போதைய சரிவு தொடங்கியது.
அதைத் தொடர்ந்து ஆர்சிபி, ஆர்ஆர், டிசி, பிபிகேஎஸ் மற்றும் இப்போது கேகேஆர் அணிகளிடம் தோல்விகள் ஏற்பட்டன.
சொந்த மைதானம்
சொந்த மைதானத்தில் தொடர் தோல்வியில் சாதனை
சேப்பாக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி மூலம், சிஎஸ்கே இப்போது ஒரே சீசனில் தொடர்ச்சியாக மூன்று சொந்த மைதானப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இது சிஎஸ்கே வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் நடக்காத ஒன்றாகும். இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பேசிய எம்எஸ் தோனி, அணியின் தோல்விகளை ஒப்புக்கொண்டார், மோசமான பேட்டிங் மற்றும் பார்ட்னர்ஷிப்கள் இல்லாதது முக்கிய கவலைகளாக எடுத்துக்காட்டினார்.
சிஎஸ்கே இப்போது புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமென்றால், இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே தற்போது உள்ளது.