LOADING...
Year Ender 2025: கிரிக்கெட்டில் இந்த ஆண்டின் சிறந்த டாப் 10 வரலாற்றுத் தருணங்கள்
கிரிக்கெட்டில் இந்த ஆண்டின் டாப் 10 வரலாற்றுத் தருணங்கள்

Year Ender 2025: கிரிக்கெட்டில் இந்த ஆண்டின் சிறந்த டாப் 10 வரலாற்றுத் தருணங்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2025
02:29 pm

செய்தி முன்னோட்டம்

2025 ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத பல வரலாற்றுச் சாதனைகளையும், முக்கியப் போட்டி முடிவுகளையும் பதிவு செய்தது. இந்திய மகளிர் அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றி, தென்னாப்பிரிக்காவின் ஐசிசி கோப்பை வறட்சிக்கு முடிவு மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் (ஆர்சிபி) நீண்ட நாள் கனவு நனவான ஐபிஎல் கோப்பை வெற்றி என இந்த ஆண்டு கிரிக்கெட்டின் முக்கிய மைல்கற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஐசிசி கோப்பை

தென்னாப்பிரிக்காவின் 27 ஆண்டு ஐசிசி கோப்பை வறட்சி முடிவு

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி, 27 ஆண்டுகள் நீடித்த ஐசிசி கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா தனது முதல் WTC பட்டத்தை வென்றது. கடைசியாக 1998 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த தென்னாப்பிரிக்கா, அதன் பிறகு முதல்முறையாக இந்த முக்கிய ஐசிசி கோப்பையைப் பெற்றது.

ஆசிய கோப்பை

இந்தியாவின் ஆசியக் கோப்பை வெற்றி 

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை வீழ்த்தி, ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. இந்த வெற்றியானது ஆசிய கிரிக்கெட்டில் இந்தியாவின் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியது.

Advertisement

தான்சானியா 

தான்சானியாவின் முதல் ஐ.சி.சி போட்டியில் பங்கேற்பு

தான்சானியா அணி அடுத்த ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பங்கேற்கத் தகுதி பெற்றது. ஆப்பிரிக்கப் பிராந்தியத் தகுதிச் சுற்றில் தோல்வியே அடையாமல், தான்சானியா அணி தனது முதல் ஐசிசி உலகப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.

Advertisement

இத்தாலி

இத்தாலி டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி

இத்தாலி கிரிக்கெட் அணி, 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்றது. ஐரோப்பிய பிராந்தியத் தகுதிச் சுற்றுப் போட்டியின் மூலம் நெதர்லாந்துடன் இணைந்து இத்தாலி இந்தக் கோப்பைக்குத் தகுதி பெற்றது. பாரம்பரியக் கிரிக்கெட் நாடுகளுக்கு அப்பால், இத்தாலி தனது முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது ஒரு வரலாற்றுச் சாதனையாகும்.

நேபாளம்

நேபாளத்தின் முதல் இருதரப்புத் தொடர் வெற்றி

நேபாளம், ஐசிசியின் முழுநேர உறுப்பினர் அந்தஸ்து பெற்ற ஒரு நாட்டிற்கு எதிராகத் தனது முதல் இருதரப்புத் தொடர் வெற்றியைப் பதிவு செய்தது. ரோஹித் பௌடல் தலைமையிலான நேபாள அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

சாம்பியன்ஸ் டிராபி

இந்தியா சாம்பியன்ஸ் டிராபி வெற்றி

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, சாம்பியன்ஸ் டிராபி 2025 பட்டத்தைக் கைப்பற்றியது. இது 2013 ஆம் ஆண்டு எம்.எஸ். தோனி தலைமையில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, இந்தியா 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதாகும். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றதைத் தொடர்ந்து, ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்தியா பெற்ற இரண்டாவது ஐசிசி கோப்பை இதுவாகும்.

ஐபிஎல்

ஆர்சிபியின் முதல் ஐபிஎல் கோப்பை வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி, நீண்ட 18 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாகத் தனது சாம்பியன் பட்டத்தை வென்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி கோப்பையைக் கைப்பற்றியது. 2008 இல் இருந்து ஒரே அணியில் விளையாடி வரும் விராட் கோலிக்கு, இது மிகவும் உணர்ச்சிகரமான வெற்றியாகவும், அவரது கனவு நனவான தருணமாகவும் அமைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஒருநாள் தொடர் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 34 ஆண்டுக்காலமாக ஒருநாள் தொடரை வெல்லாத வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதற்கு முன், வெஸ்ட் இண்டீஸ் கடைசியாக 1991 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரை வென்றது. இந்த வெற்றி அவர்களுக்கு 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.

மகளிர் கிரிக்கெட்

இந்திய மகளிர் அணியின் முதல் உலகக் கோப்பை வெற்றி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தனது 47 ஆண்டுகாலக் கனவை நனவாக்கியது. நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் விளையாட்டு அகாடமி மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, இந்திய மகளிர் அணி தனது முதல் உலகக்கோப்பையை வென்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குப் பிறகு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற நான்காவது அணி என்றப் பெருமையை இந்தியா பெற்றது. மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பைகளை வென்ற மூன்றாவது நாடாகவும் மாறியது.

மாற்றுத் திறனாளி அணி

இந்தியப் பார்வை மாற்றுத் திறனாளி மகளிர் அணியின் டி20 உலகக் கோப்பை வெற்றி

இந்தியா சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை, மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளுக்குப் பிறகு, இந்தியப் பார்வை மாற்றுத் திறனாளி மகளிர் கிரிக்கெட் அணியும் ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. தீபிகா டிசி தலைமையிலான இந்த அணி, முதல்முறையாக நடைபெற்றப் பார்வை மாற்றுத் திறனாளி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது.

Advertisement