ஒருநாள் உலகக்கோப்பை தொடக்க விழா நடைபெறாததற்கு காரணம் இதுதான்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடர் வியாழக்கிழமை (அக்டோபர் 5) தொடங்க உள்ளது. கடந்த 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் போட்டியில் நேருக்கு நேர் மோத உள்ளன. போட்டிக்கான கேப்டன்கள் தினம் புதன்கிழமை நடத்தப்பட்ட நிலையில், போட்டிக்கான தொடக்கவிழா நடைபெறாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு, புதன்கிழமை தொடக்க விழா நடத்தப்படும் என்றும், தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்திருந்தது. இதனால், பிசிசிஐ நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடக்க விழாவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
தொடக்க விழா இடம் பெறாதது குறித்து வெளியான தகவல்
ஒருநாள் உலகக்கோப்பைக்கான தொடக்க விழா நடைபெறுவது குறித்து சில தகவல்கள் வெளியாகி இருந்தாலும், பிசிசிஐ அல்லது ஐசிசி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி இது குறித்து கூறுகையில், ஒருநாள் உலகக்கோப்பைக்கு தொடக்க விழா நடத்துவது குறித்து எந்த திட்டமும் பிசிசிஐயிடம் ஆரம்பத்தில் இருந்தே இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஐபிஎல்- ஐ பொறுத்தவரை மாலை போட்டி தொடங்குவதால், அதற்கு முன்பு ஒரு சிறிய தொடக்கவிழாவை நடத்தலாம் என்றும், ஆனால் இதில் போட்டி மதியம் தொடங்குவதால் அவ்வாறு செய்ய முடியாது என்றும் கூறினார்.