யு23 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர்; சிராக் சிக்கரா சாதனை
சிராக் சிக்கரா யு23 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அல்பேனியாவில் நடந்த யு23 மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட சிராக் 4-3 என்ற புள்ளிக்கணக்கில் கிர்கிஸ்தானின் அப்டிமாலிக் கராச்சோவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். முன்னதாக, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் செராவத், யு23 பட்டத்தை வென்ற முதல் இந்தியர் ஆவார். அவர் 2022இல் இதே எடைப் பிரிவில் தங்கம் வென்றார். யு23 சாம்பியன் ஆன முதல் இந்தியப் பெண் ரீத்திகா ஹூடா ஆவார்.
இந்திய அணியின் செயல்திறன்
இந்தியா அல்பேனியாவில் நடந்த யு23 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என ஒன்பது பதக்கங்களை வென்றது. இந்த போட்டியில், இந்திய அணி 82 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது. சிராக் சிக்கரா தங்கம் வென்ற நிலையில், பெண்களுக்கான 59 கிலோ எடைப்பிரிவில் அஞ்சலி வெள்ளிப் பதக்கம் வென்றார். நேஹா சர்மா (57 கிலோ), ஷிக்ஷா (65 கிலோ), மோனிகா (68 கிலோ) ஆகியோர் அந்தந்த பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஆடவர் பிரிவில், விக்கி (97 கிலோ), சுஜீத் கல்கல் (70 கிலோ), அபிஷேக் தாஹா (61 கிலோ), விஸ்வஜித் (55 கிலோ) ஆகியோர் வெண்கலம் வென்றனர்.