ஐபிஎல் 2023 : முகேஷ் சவுத்ரிக்கு பதிலாக ஆகாஷ் சிங்கை ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2023 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில் மாற்று வீரராக ஆகாஷ் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கடந்த காலத்தில் ஐபிஎல்லில் 2020 மற்றும் 2021இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆகாஷ் சிங் இடம் பிடித்திருந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் முதலில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஆகாஷ் சிங் தற்போது நாகாலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் யு-19 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆசிய கோப்பையில் சில போட்டிகளில் விளையாடியுள்ள ஆகாஷ் சிங் முகேஷ் சவுத்ரியின் இடத்தை நிரப்புவாரா, அவருக்கு பிளேயிங் 11'இல் இடம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்
சிஎஸ்கே அணி மார்ச் வெள்ளிக்கிழமை (மார்ச் 31 தொடங்கும் ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் விலகிய நிலையில், சவுத்ரியின் இழப்பும் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஏப்ரல் 8 ஆம் தேதி நியூசிலாந்தில் இலங்கையின் சுற்றுப் பயணம் முடிவடைந்த பின்னரே, மகேஷ் தீக்ஷனா மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோர் சென்னை அணியில் இணைவர். மேலும் பென் ஸ்டோக்ஸ் காலில் காயம் முழுமையாக சரியாகாததால் ஆரம்ப போட்டிகள் சிலவற்றில் பந்துவீச மாட்டார். இதனால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு படுமோசமான நிலையில் உள்ளது. சிஎஸ்கே இதை எப்படி நிர்வகிக்கும் என்பது ரசிகர்களிடையே மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.