Page Loader
ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா கிரிக்கெட் அணி தகுதி பெற்றது
ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா தகுதி

ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பைக்கு கனடா கிரிக்கெட் அணி தகுதி பெற்றது

எழுதியவர் Sekar Chinnappan
Jun 22, 2025
07:46 pm

செய்தி முன்னோட்டம்

கனடாவின் கிங் சிட்டியில் நடந்த அமெரிக்க தகுதிச் சுற்றில் பஹாமாஸை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் கனடா ஆடவர் ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026க்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் கனடா தோல்வியே இல்லாமல் தகுதிச் சுற்றை நிறைவு செய்து, இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இடத்தை உறுதி செய்துள்ளது. முன்னதாக, பஹாமாஸிற்கு எதிராக முதலில் பந்து வீசத் தேர்வுசெய்த கனடாவின் பந்துவீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பஹாமாஸை 19.5 ஓவர்களில் வெறும் 57 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். கலீம் சனா மற்றும் சிவம் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெற்றி

ஆறு ஓவர்களில் வெற்றி

எளிதான இலக்குடன் களமிறங்கிய கனடா, தில்ப்ரீத் பஜ்வாவின் 14 பந்துகளில் 36 ரன்கள் எடுத்ததன் மூலம் 5.3 ஓவர்களில் இலக்கை எட்டியது. கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் தலைமையில், கனடா அணி, முன்னதாக பெர்முடாவை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதிச் சுற்றை வெற்றியுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கேமன் தீவுகளுக்கு எதிரான 2 போட்டிகளிலும், பஹாமாஸுக்கு எதிரான 2 போட்டிகளிலும் எளிதாக வென்றது. இதன் மூலம் கனடா இப்போது 13 தகுதி பெற்ற அணிகளின் பட்டியலில் இணைகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பிற அணிகள் அடங்கும். மீதமுள்ள ஏழு இடங்கள் ஜூலை முதல் அக்டோபர் 2025 வரை திட்டமிடப்பட்ட பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் தீர்மானிக்கப்படும்.