ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : 8 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி
டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் ஹாலில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 21) நடந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் போட்டியில், 50 கிலோ எடைப் பிரிவில் நிகத் ஜரீன் மெக்சிகோவை சேர்ந்த ஃபாத்திமா ஹெர்ரேரா அல்வாரெஸை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் நிகத் ஜரீன், நிது கங்காஸ் (48 கிலோ), மனிஷா மவுன் (57 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (60 கிலோ) ஆகியோருடன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதற்கிடையே ஷஷி சோப்ரா (63 கிலோ), மஞ்சு பாம்போரியா (66 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினர்.
காலிறுதியில் விளையாடும் இந்திய வீராங்கனைகள்
முன்னதாக சாக்ஷி சவுத்ரி (52 கிலோ), லோவ்லினா போர்கோஹைன் (75 கிலோ), சவீதி பூரா (81 கிலோ) மற்றும் நுபுர் ஷியோரன் (+81 கிலோ) ஆகியோருக்கு காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளில் எட்டு பேர் புதன்கிழமை (மார்ச் 22) தொடங்கும் காலிறுதி போட்டியில் விளையாட உள்ளனர். இதன் மூலம் 2022 இல் துருக்கியில் நடந்த உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 1 தங்கம் மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியிருந்த நிலையில், இந்த முறை கூடுதல் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.