பென் ஸ்டோக்ஸ் உடற்தகுதி கேள்விக்குறி? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 2023 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு பென் ஸ்டோக்ஸால் மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது ஸ்டோக்ஸ் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். எனினும் ஐபிஎல்லில் பங்கேற்பதை உறுதி செய்த பென் ஸ்டோக்ஸ் அணியிலும் இணைந்துள்ளார். ஆனால் காயம் இன்னும் முழுமையாக குணமடையாததால், ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் முதல் சில போட்டிகளில் பந்துவீச மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அவர் பேட்டிங் செய்வதும் கேள்விக்குறியாகவே உள்ளதாக கூறப்படும் நிலையில், மார்ச் 31 ஆம் தேதி நடக்க உள்ள முதல் போட்டிக்கு முன்னதாக அவரது பங்கேற்கு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
பென் ஸ்டோக்ஸ் உடற்தகுதி குறித்து பயிற்சியாளர் கருத்து
சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி பென் ஸ்டோக்ஸ் முதல் சில போட்டிகளில் பந்துவீச மாட்டார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார். எனினும் அவர் ஒரு பேட்ஸ்மேனாக போட்டியில் பங்கேற்பார் என உறுதி அளித்துள்ளார். ஹஸ்ஸி மேலும், "சிஎஸ்கே மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த பிசியோதெரபி நிபுணர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். அவர் முழுமையாக குணமடைய சில வாரங்கள் ஆகலாம். எனக்கு 100% உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் போட்டியின் ஒரு கட்டத்தில் அவரை பந்துவீச வைப்போம்." என்று அவர் மேலும் கூறினார். சிஎஸ்கே தனது தொடக்க ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) உடன் அகமதாபாத்தின் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது.