INDvsNZ முதல் டெஸ்ட்; 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இந்தியா
பெங்களூரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக தனது முதல் இன்னிங்சில் 402 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. முன்னதாக, மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், வியாழக்கிழமை (அக்டோபர் 17) இரண்டாம் நாளில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வீரர்கள் தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் எடுத்தனர். மேலும், ஐந்து இந்திய வீரர்கள் டக்கவுட் ஆகினர்.
நியூசிலாந்து பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் அபாரம்
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும் வில்லியம் ஓ'ரூர்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து பேட்டர்கள், இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி ரன் குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 91 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்த நிலையில், ராச்சின் ரவீந்திராவின் 134 ரன்கள் மற்றும் டிம் சவுத்தியின் அதிரடி அரைசதம் அணியின் ஸ்கோரை 402 ரன்களாக உயர்த்தியது. இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.