
பிசிசிஐயின் மத்திய ஒப்பந்ததில் மாற்றம் செய்ய திட்டம்; சீனியர் வீரர்களுக்கான கிரேடுகளை குறைக்க முடிவு என தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்த ஆண்டிற்கான அதன் மத்திய ஒப்பந்தப் பட்டியலை இன்னும் அறிவிக்கவில்லை.
மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களுக்கு இந்த முறை மத்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான டைனிக் ஜாக்ரனின் அறிக்கையின்படி, மார்ச் 29 அன்று குவஹாத்தியில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தின் போது ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் டெஸ்ட் தொடருக்கான அணியைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மை கவனம் செலுத்தப்படும் அதே வேளையில், மத்திய ஒப்பந்தங்கள் பற்றிய விவாதங்களும் நிகழ்ச்சி நிரலில் உள்ளன.
ஏ+ கிரேடு
ஏ+ கிரேடு ஒப்பந்தத்தில் இருந்து மூத்த வீரர்களை விடுவிக்க திட்டம்
தற்போதைய நிலைப்படி விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்கள் கிரேடு ஏ+ ஒப்பந்தங்களை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று வடிவங்களிலும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மட்டுமே உயர்மட்ட ஒப்பந்தங்களை வழங்க பிசிசிஐ விரும்புவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூவரும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், கிரேடு ஏ+ அந்தஸ்துக்கான அவர்களின் தகுதி நிச்சயமற்றதாக மாறியுள்ளது.
தற்போது, உறுதிப்படுத்தப்பட்ட ஒரே ஏ+ கிரேடு கிரிக்கெட் வீரராக ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே உள்ளார். அவரது ஒப்பந்த நிலை பாதிக்கப்படாமல் உள்ளது.