காயத்திற்கு சிகிச்சை எடுத்து வரும் வீரர்கள் குறித்து பிசிசிஐ முக்கிய அப்டேட் வெளியீடு
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) காயத்திற்காக சிகிச்சையில் உள்ள வீரர்கள் குறித்த அப்டேட்டை வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியிட்டுள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடெமியில் தற்போது ஜஸ்ப்ரீத் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உடற்தகுதியை மேம்படுத்தி வருகின்றனர். பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா முழு உடற்தகுதியை பெறுவதற்கான இறுதி கட்டத்தில் இருக்கிறார் மற்றும் மீண்டும் முழு திறனுடன் பந்துவீசுகிறார். பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் வரும் நாட்களில் என்சிஏ பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளனர்.
என்சிஏவில் உள்ள பேட்ஸ்மேன்களின் தற்போதைய நிலை
பேட்டர்கள் கேஎல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் வலைகளில் தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பிசிசிஐ மருத்துவக் குழு அவர்கள் குணமடைந்ததில் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன், வரும் நாட்களில் திறமை மற்றும் வலிமையின் அடிப்படையில் அவர்களுக்கான பயிற்சியின் தீவிரத்தை அதிகரிக்க உள்ளது. இது தவிர அணியின் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரரான ரிஷப் பந்தும் மீண்டும் பேட்டிங் மற்றும் வலைகளில் கீப்பிங் செய்து உடற்தகுதியை மேம்படுத்தி வருவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ரிஷப் பந்தை பொறுத்தவரை ஏற்கனவே திட்டமிட்டபடி பயிற்சியை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பை 2023க்கு முன்னதாக, காயத்திற்காக சிகிச்சை எடுத்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றிய நேர்மறையான அறிவிப்புகளால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.