ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியாவின் ட்ரம்ப் கார்டு இவர் தான் : அஜித் அகர்கர்
சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை 2023 தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எட்டாவது முறையாக பட்டத்தை வென்றது. இந்திய அணி பெற்ற அபார வெற்றியின் பின்னணியில் முக்கிய வீரராக முகமது சிராஜ் இருந்தாலும், வரவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையில், குல்தீப் யாதவ் தான் இந்தியாவின் ட்ரம்ப் கார்டாக இருப்பார் என இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக, சூப்பர் 4 சுற்று போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். இதன் மூலமே இந்தியா பாகிஸ்தானை 32 ஓவர்களில் 128 ரன்களுக்கு மடக்க முடிந்தது குறிப்பிடத்தக்கது.
குல்தீப் யாதவை அஜித் அகர்கர் போற்றுவதன் பின்னணி
பாகிஸ்தான் மட்டுமல்லாது இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம், இலங்கையை 172 ரன்களுக்கு இந்தியா சுருட்ட முடிந்தது. குல்தீப் யாதவ் குறித்து பேசிய அஜித் அகர்கர், "குல்தீப் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டாலும், சில வருடங்களுக்கு முன்பு இந்திய அணியில் வழக்கமான வீரராக எங்கும் இல்லை. தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தபோது அவருடன் நெருக்கமாக பணியாற்றியதாகவும், அவரது சிறப்புத் திறன் குறித்து தனக்கு தெரியும் எனவும் கூறினார் "அவரை பிசிசிஐ ஒரு சிறந்த வீரராக வளர்த்து எடுத்துள்ளது. ஒருநாள் உலகக்கோப்பையில் அவர் இந்தியாவின் துருப்புச் சீட்டாக செயல்படுவார்." எனத் தெரிவித்துள்ளார்.