எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி அறிவிப்பு!
பிசிசிஐ ஜூன் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் தொடங்க உள்ள ஏசிசி எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்தியா 'ஏ' (எமர்ஜிங்) அணியை அறிவித்துள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 13 ஆம் தேதி டின் குவாங் ரோடு பொழுதுபோக்கு மைதானத்தில் ஹாங்காங் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் நிலையில், தலா 4 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா இடம் பெற்றுள்ள குழுவில் ஹாங்காங், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மற்றொரு குழுவில் வங்கதேசம், இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை உள்ளன. இறுதிப்போட்டி ஜூன் 21 அன்று நடைபெறுகிறது.
இந்திய அணிக்கு கேப்டனாக ஸ்வேதா ஷெராவத் நியமனம்
இந்திய மகளிர் ஏ அணிக்கு ஸ்வேதா ஷெராவத்தை கேப்டனாகவும், சௌமியா திவாரியை துணை கேப்டனாகவும் நியமித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அணியின் தலைமை பயிற்சியாளர் நூஷின் அல் காதீரின் வழிகாட்டுதலின் கீழ் அணி விளையாட உள்ளது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள பல வீராங்கனைகள் சமீபத்தில் மகளிர் ஐபிஎல் 2023 இன் தொடக்க சீசனில் இடம்பெற்று செயல்பட்டவர்களாக உள்ளனர். இந்திய அணி: ஸ்வேதா ஷெராவத், சௌமியா திவாரி, த்ரிஷா கோங்காடி, முஸ்கன் மாலிக், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, உமா செத்ரி, மம்தா மடிவாலா, டைட்டாஸ் சதாஸ் யாஷஸ்ரீ எஸ், காஷ்வீ கௌதம், பார்ஷவி சோப்ரா, மன்னத் காஷ்யப், பி அனுஷா.