ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்தது பிசிசிஐ
2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் பார்ட்னராக BookMyShow செயல்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை (ஆகஸ்ட் 23) அறிவித்துள்ளது. செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் முதல், நவம்பர் 19 அன்று நடைபெறும் இறுதிப்போட்டி வரையிலான அனைத்து போட்டிகளின் டிக்கெட் முன்பதிவும் BookMyShow தளத்தில் மேற்கொள்ளப்படும். ரசிகர்களுக்கு தடையற்ற மற்றும் விரிவான டிக்கெட் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், போட்டிக்கான விற்பனை செயல்முறை பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு 24 மணி நேரம் முன்னதாக ஐசிசியின் வணிக கூட்டாளியான மாஸ்டர்கார்டு வைத்துள்ளவர்களுக்கு முன்கூட்டிய விற்பனையும் தொடங்க உள்ளது.
டிக்கெட் விற்பனை அட்டவணை
ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான டிக்கெட்டுகளின் முன்பதிவு அட்டவணை பின்வருமாறு: இந்தியா அல்லாத வார்ம்-அப் போட்டிகள் மற்றும் அனைத்து இந்தியா அல்லாத குழுநிலை போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 25 ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 30 ஆம் தேதி இரவு 8 மணி முதல் கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்திய அணியின் போட்டிகளுக்கான முன்பதிவு தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு 8 மணி முதல் சென்னை, டெல்லி மற்றும் புனேயில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.
செப்டம்பர் 3 முதல் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்
செப்டம்பர் 1 ஆம் தேதி இரவு 8 மணி முதல் தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் நடக்கும் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 8 மணி முதல் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது. பாகிஸ்தானுடனான மோதல் உட்பட இந்தியா அகமதாபாத் மைதானத்தில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு 8 மணி முதல் தொடங்க உள்ளது. செப்டம்பர் 15 ஆம் தேதி இரவு 8 மணி முதல் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கும்.
மாஸ்டர்கார்டு முன்கூட்டிய விற்பனை அட்டவணை
ஐசிசியின் வணிக பார்ட்னரான மாஸ்டர்கார்டு வைத்துள்ளவர்கள், வழக்கமான டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு ஒருநாள் முன்னதாக டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். அதற்கான அட்டவணை பின்வருமாறு:- ஆகஸ்ட் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் வார்ம் அப் போட்டிகள் மற்றும் இந்தியா அல்லாத அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை 6 மணி முதல் பயிற்சி விளையாட்டுகள் தவிர்த்து அனைத்து இந்திய போட்டிகளுக்குமான விற்பனை தொடங்க உள்ளது. மேலும், செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை 6 மணி முதல் அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.
டிக்கெட் விற்பனை குறித்து பிசிசிஐ அறிக்கை
பிசிசிஐ இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி ஹேமங் அமீன் டிக்கெட் விற்பனை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு சர்வதேச நாட்காட்டியின் உச்ச நிகழ்வான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை 2023ஐ நாம் நெருங்கி வரும் நிலையில், BookMyShowவை டிக்கெட் தளமாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கான தொடக்கம் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023க்கு ஒரு முக்கிய தருணம். ரசிகர்களுக்கு தடையற்ற டிக்கெட் அனுபவத்தை வழங்க உறுதி பூண்டுள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார். ஐசிசி நிகழ்வுகளின் தலைவர் கிறிஸ் டெட்லி, அனைவருக்கும் பொருந்தக்கூடிய விலைகளுடன், ரசிகர்கள் தங்கள் டிக்கெட்டுகளைப் பெறவும், போட்டியை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவதையும் நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.