ஒலிம்பிக் கூடைப்பந்து தகுதிச்சுற்று போட்டியில் இந்தோனேசியாவை வீழ்த்தியது இந்தியா
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13) சிரியாவின் டமாஸ்கஸில் நடைபெற்ற ஒலிம்பிக் கூடைப்பந்து தகுதிச் சுற்று போட்டியில் இந்திய அணி இந்தோனேசியாவை வீழ்த்தியது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவதற்கான ஆசிய அளவிலான முதல் கட்ட தகுதிச்சுற்று ஆட்டங்கள் சிரியாவில் ஆகஸ்ட் 12அன்று தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக, சனிக்கிழமை நடந்த முதல் போட்டியில் சிரியாவை 85-74 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா, இரண்டாவது போட்டியில் இந்தோனேசியாவை 90-74 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் பஹ்ரைன் அணி உள்ளது. இந்நிலையில், இந்திய அணி தனது மூன்றாவது போட்டியில் திங்கட்கிழமை கஜகஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது.