BANvsSL ஒருநாள் உலகக்கோப்பை : வங்கதேச அணிக்கு 280 ரன்கள் இலக்கு நிர்ணயம்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை வங்கதேசத்திற்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பெரேரா 4 ரன்களில் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த பாதும் நிசங்க மற்றும் குஷால் மெண்டிஸ் நிலைத்து நின்று அணியை மீட்டெடுத்தனர். எனினும் பாதும் நிசங்க 41 ரன்களில் அவுட்டானார்.
அவரைத் தொடர்ந்து குஷால் மெண்டிஸும் 19 ரன்களில் வெளியேற, சதீரா சமரவிக்ரம மற்றும் சாரித் அசலங்க ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
Srilanka sets 280 runs target to bangladesh
சதமடித்தார் சாரித் அசலங்க
இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை கிரிக்கெட் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில், சதீரா சமரவிக்ரம 41 ரன்களில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ஏஞ்சலோ மேத்யூஸ் கிரீஸுக்கு வந்து பந்துவீச்சை எதிர்கொள்ள தாமதமானதால் டைம் அவுட் முறை மூலம் அவுட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
அடுத்தடுத்து வந்தவர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஒருமுனையில் நிலைத்து நின்ற சாரித் அசலங்க 108 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம், 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது.
வங்கதேச அணியில் சிறப்பாக பந்துவீசிய தன்சிம் ஹாசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.