BANvsSL : வங்கதேசம் வெற்றி; முடிவுக்கு வந்தது இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் திங்கட்கிழமை (நவம்பர் 6) நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேச அணி இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சாரித் அசலங்க 108 ரன்கள் குவித்து சதமடித்த நிலையில் பாதும் நிசங்க மற்றும் சதீரா சமரவிக்ரம தலா 41 ரன்கள் எடுத்தனர்.
இதன் மூலம் 49.3 ஓவர்களில் இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் எடுத்தது.
வங்கதேச அணியில் சிறப்பாக பந்துவீசிய தன்சிம் ஹாசன் ஷாகிப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Bangladesh beat Srilanka by 3 wickets
வங்கதேச அணி வெற்றி
280 ரன்கள் எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தன்சித் ஹசன் 9 ரன்களிலும், லிட்டன் தாஸ் 23 ரன்களிலும் வெளியேறினர்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நஜ்மல் ஹுசைன் சாண்டோ 90 ரன்களும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 82 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை வலுவாக்கினர்.
பிறகு, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், 41.1 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், தற்போதைய தோல்வி மூலம் இலங்கையும் அரையிறுதி வாய்ப்பை முழுமையாக இழந்துள்ளது.