Babar Azam Resigns : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் ராஜினாமா
2023 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையில் தனது ஒன்பது லீக் ஆட்டங்களில் ஐந்தில் தோல்வியடைந்து அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியது. பாபர் 9 போட்டிகளில் 320 ரன்களுடன் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. கேப்டன்சி மட்டுமல்லாது பேட்டிங்கிலும் அவரது ஃபார்ம் இல்லாதது குறித்து கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து கடும் அழுத்தம் வந்த நிலையில், அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். பாகிஸ்தானின் உலகக்கோப்பை அணியின் துணைக் கேப்டனாக இருந்த ஷதாப் கான் மற்றும் ஷாஹீன் அப்ரிடி ஆகிய இருவரில் ஒருவர் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாபர் அசாமின் உருக்கமான பதிவு
தனது ராஜினாமா குறித்து பாபர் அசாம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "2019இல் அணியை வழிநடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எனக்கு அழைப்பு வந்த தருணம் தெளிவாக நினைவிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நான் பல உயர்வையும் தாழ்வையும் அனுபவித்துள்ளேன், ஆனால் முழு மனதுடன் மற்றும் ஆர்வத்துடன் பாகிஸ்தானின் பெருமையை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டேன். இன்று, நான் அனைத்து வடிவங்களிலும் பாகிஸ்தானின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன். இது கடினமான முடிவு, ஆனால் இந்த முடிவுக்கு இது சரியான நேரம் என்று நான் உணர்கிறேன். நான் தொடர்ந்து மூன்று வடிவங்களிலும் பாகிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்துவேன்." எனத் தெரிவித்துள்ளார்.