AUSvsSA Semifinal : 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா தகுதி
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முன்னதாக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 16) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சால் தென்னாப்பிரிக்க வீரர்கள் திணறிய நிலையில், தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் டேவிட் மில்லர் 101 ரன்களும், ஹென்றிச் கிளாசன் 47 ரன்களும் எடுத்து அணியை மீட்ட நிலையில், 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போராடி வென்ற ஆஸ்திரேலியா
213 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி 6 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தனர். எனினும், 7வது ஓவரின் முதல் பந்தில் டேவிட் வார்னரும், அவரைத் தொடர்ந்து மிட்செல் மார்ஷும் அவுட்டாக அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. டிராவிஸ் ஹெட் மட்டும் நிலைத்து நின்று 68 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க, ஆஸ்திரேலிய அணி வெற்றியை ருசிக்க போராட ஆரம்பித்தது. பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் பொறுமையாக விளையாடி 47.2 ஓவர்களில் இலக்கை எட்டி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இதையடுத்து நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.