உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற எஞ்சியுள்ள வாய்ப்புகள் என்னென்ன? விரிவான அலசல்
இந்தியாவுக்கு எதிரான பிங்க்-பால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் முடிவில் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா 2023-25 சுழற்சியில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள், 4 தோல்விகள் மற்றும் ஒரு டிராவுடன் 60.71 ரேட்டிங் புள்ளிகளைக் கொண்டுள்ளது. தென்னாபிரிக்கா 9 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி மற்றும் ஒரு டிராவுடன் 59.27 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் இடம்
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா உடனான தோல்விக்குப் பின்னர், 16 போட்டிகளில் 9 வெற்றிகள், 6 தோல்விகள் மற்றும் ஒரு டிராவுடன், அட்டவணையில், 57.29 ரேட்டிங் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற, எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெல்ல வேண்டும். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் எஞ்சிய போட்டிகளின் வெற்றி தோல்விகளும் இந்தியாவின் வாய்ப்பை பாதிக்கும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இன்னும் 5 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அவற்றில் 3 போட்டிகளில் மட்டும் வென்றால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துவிடும். மறுபுறம், தென்னாப்பிரிக்கா தன்னுடைய எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டும்.