AUSvsSA 2வது டி20 போட்டி : 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 1) நடந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நிலையில், தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்ய களமிறங்கியது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெம்பா பவுமா 39 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்த நிலையில், கேப்டன் ஐடென் மார்க்ரம் அணியில் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சைப் பொறுத்தவரை சீன் அப்போட் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், பெஹ்ரன்டோர்ஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மேத்யூ ஷார்ட் - மிட்செல் மார்ஷ் ஜோடி அபாரம்
165 ரன்கள் எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி களமிறங்கிய நிலையில், தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டிராவிஸ் ஹெட் 18 ரன்களில் அவுட்டானார். எனினும், அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஷார்ட் மற்றும் ஒன் டவுனாக களமிறங்கிய மிட்செல் மார்ஷ் ஜோடி அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. மேத்யூ ஷார்ட் 66 ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில், மிட்செல் மார்ஷ் கடைசி வரை அவுட்டாகாமல் 79 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை, ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் 2-0 என கைப்பற்றியுள்ளது.