
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் - நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது
செய்தி முன்னோட்டம்
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தம்பதிக்கு திங்கட்கிழமை (மார்ச் 24) பெண் குழந்தை பிறந்துள்ளதாக, இருவரும் இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், "ஒரு பெண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டோம்" என்ற தலைப்பில் இரண்டு ஸ்வான்ஸின் இதயப்பூர்வமான படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்புடன் அவர்கள் ஒரு குழந்தை ஈமோஜியுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
2023 ஆம் ஆண்டு மும்பையின் கண்டாலாவில் நடந்த ஒரு தனியார் விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட கே.எல்.ராகுல் மற்றும் அதியா ஷெட்டி தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும்.
வாழ்த்து
பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து
இந்த செய்தியை தம்பதியினர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டவுடன், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இருவருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2025 சீசன் தொடங்கியுள்ள நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள கே.எல்.ராகுல், மனைவியின் பிரசவம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை.
முன்னதாக, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை.
அதற்கான சரியான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், மனைவியின் பிரசவம் மற்றும் அது சார்ந்த குடும்ப பொறுப்புகளால்தான் அவர் கேப்டன் பொறுப்பை ஏற்கவில்லை என கிரிக்கெட் வட்டாரங்களில் தற்போது பேசப்படுகிறது.