ஆசிய பாரா போட்டிகள் 2026: சிந்துவெளி நாகரிக ஆடையில் அசத்திய இந்திய வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026-ன் தொடக்க விழாவில், பழங்கால சிந்துவெளி நாகரிகக் கலை வேலைப்பாடுகளால் வடிவமைக்கப்பட்ட பிரத்யேக பாரம்பரிய சீருடையை அணிந்து வந்த இந்திய வீரர்கள் ஒட்டுமொத்த சர்வதேச அரங்கையும் திரும்பிப் பார்க்க வைத்தனர். ஒரே இதயத்தை கற்பனை செய் (Imagine One Heart) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு அக்டோபர் 18 முதல் 24 வரை நடைபெறும் இந்த சர்வதேச விளையாட்டுத் திருவிழாவில், 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய தேசிய கொடி
சிந்துவெளி நாகரிக கலை பொக்கிஷங்கள்
இந்தியக் குழுவினர் அணிந்து வந்த அடர் நீல நிற பிளேசர்களில், சிந்துவெளி நாகரிகத்தின் தொன்மையான அடையாளங்களான மதகுரு அரசன் சிற்பம், உலகப் புகழ்பெற்ற வெண்கல நடனமாடும் மங்கை உருவம் மற்றும் பழங்கால முத்திரைகளின் தங்க நிற வடிவமைப்பு பொறிக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
மேலும் பிளேசரின் பாக்கெட்டில் இதயத்திற்கு அருகில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியும், அதன் காலர் பகுதியில் ஏழு நதிகள் பாயும் புண்ணிய பூமியான சப்த சிந்துவை நினைவுகூரும் வகையிலான வடிவமைப்பும் இடம்பெற்றிருந்தது.
11 விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்கும் 112 ஆண்கள், 56 பெண்கள் உட்பட 168 வீரர்கள் அடங்கிய 281 பேர் கொண்ட பலம் வாய்ந்த இந்தியக் குழு இப்போட்டிகளில் பங்கேற்கிறது.
காரணம்
கொடியேந்திய பிரமோத் பகத் & சிம்ரன் சர்மா
தொடக்க அணிவகுப்பில் பாரா பேட்மிண்டன் நட்சத்திரம் பிரமோத் பகத் மற்றும் பாரா தடகள வீராங்கனை சிம்ரன் சர்மா ஆகியோர் இந்திய தேசியக் கொடியை ஏந்தி அணியை கம்பீரமாக வழிநடத்தினர்.
முன்னதாக கொடியேந்துபவராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினா படேலுக்குப் பதிலாக சிம்ரன் சர்மா கடைசி நேரத்தில் நியமிக்கப்பட்டார்.
இது குறித்துப் பேசிய தடகளப் பயிற்சியாளர் சத்யநாராயணா, பவினா படேலுக்கு அடுத்த நாளே (அக். 19) முக்கியமான காலிறுதிப் போட்டி உள்ளதாலும், சக்கர நாற்காலி வீராங்கனையான அவர் தொடக்க விழா அரங்கிற்கு சென்று திரும்ப சுமார் 6 மணி நேரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்ததாலும், அவரது உடல் நலன் மற்றும் ஓய்வைக் கருத்தில் கொண்டே இந்த மாற்றம் செய்யப்பட்டதாக விளக்கமளித்தார்.