சென்னையில் ஹாக்கி விளையாட ஓகே சொன்ன பாகிஸ்தான்
ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானும் சீனாவும் பங்கேற்பதை உறுதி செய்துள்ளன. இந்தச் செய்தியை தமிழ்நாடு ஹாக்கி தலைவர் ஜே.சேகர் மனோகரன் திங்களன்று (ஏப்ரல் 24) உறுதிப்படுத்தினார். "இரு அணிகள் (சீனா மற்றும் பாகிஸ்தான்) பங்கேற்பதில் ஊடகங்கள் சந்தேகம் தெரிவித்த நிலையில், அவர்கள் தாங்கள் பங்கேற்பதை உறுதிப்படுத்தி உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்திய அணி பங்கேற்காது எனக் கூறப்பட்டு அதில் முடிவு எட்டப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் முதல் இந்திய நகரம்
2011 இல் தொடங்கிய ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியை நடத்தும் முதல் இந்திய நகரம் எனும் பெருமையை சென்னை பெறவுள்ளது. ஹாக்கி இந்தியா குழு அதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறது. சமீப காலங்களில், இந்தியாவில் சர்வதேச ஹாக்கி விளையாட்டு என்றால் ஒடிசா முதல் தேர்வாக இருந்தது. இதற்கு காரணம் அங்கு மாநில அரசு ஹாக்கிக்கு கொடுக்கும் ஊக்கமும் மற்றும் வலுவான உள்கட்டமைப்பும் தான். 2018 மற்றும் 2023 இல் இரண்டு உலகக் கோப்பைகள் மற்றும் எஃப்ஐஎச் ப்ரோ லீக் விளையாட்டுகளை ஒடிஷா நடத்தியது. இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் வாய்ப்பை சென்னை கைப்பற்றியுள்ளது.