பேக்கரியில் வேலை செய்து கொண்டே இந்திய ஹாக்கி அணிக்குள் நுழைந்த கார்த்தி செல்வத்தின் பின்னணி
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி நான்காவது முறையாக பட்டம் வென்றது.
இந்த தொடரின் சிறந்த வீரராக இந்திய அணியின் ஹர்திக் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தொடரின் சிறந்த இளம் வீரராக 21 வயதேயான கார்த்தி செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் செப்டம்பர் 1, 2001இல் பிறந்த கார்த்தி செல்வம், மிகவும் எளிய பின்னணியை கொண்டவர் ஆவார்.
அவரது தந்தை செல்வம் அரசுக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்த நிலையில், தாய் வளர்மதி கூலி வேலை பார்த்து வந்தார்.
குடும்பத்தின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யவே ஒருபக்கம் போராடினாலும், கார்த்தியின் ஹாக்கி மோகம், அவரை முழுமையாக விளையாட்டின் பக்கம் திருப்பியது.
Hockey Player Karthi Selvam background
கொரோனா காலத்தில் பேக்கரியில் வேலை செய்த கார்த்தி
ஹாக்கி மீதான மோகத்தால் கோவில்பட்டியில் உள்ள தமிழக அரசின் விளையாட்டு விடுதியில் சேர்ந்து தனது திறனை மேம்படுத்தத் தொடங்கினார்.
கடின உழைப்பு மூலம் ஜூனியர் போட்டிகளில் தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டு, 2018இல் இந்தியா யு-21 அணியில் இடம் பிடித்தார்.
2020 கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானத்திற்காக ஒரு பேக்கரியில் ரூ.5,000 சம்பளத்திற்கு பகுதிநேரமாக வேலையும் பார்த்துக்கொண்டே பயிற்சியையும் தொடர்ந்துள்ளார்.
அதன் பின்னர் 2022 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்ததோடு, தான் விளையாடிய முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக கோல் அடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தற்போது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியிலும் சிறப்பாக செயல்பட்ட கார்த்தி, 2024 ஒலிம்பிக்கில் பங்குபெறும் இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.