பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கல்தா! ஆசிய கோப்பை போட்டியை இலங்கையில் நடத்த திட்டம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை வேறு நாட்டில் நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் 'ஹைப்ரிட் மாடல்' பரிந்துரையை மற்ற உறுப்பினர் நாடுகள் நிராகரித்ததால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் பாகிஸ்தானுக்கு பதிலாக போட்டியை இலங்கையில் நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கோப்பை போட்டிகள் அங்கு நிலவிய அசாதாரண சூழல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போட்டியை பாகிஸ்தானிலிருந்து மாற்ற காரணம் என்ன?
பிசிசிஐ பாதுகாப்பு அனுமதி இல்லாத காரணத்தால் பாகிஸ்தானுக்கு இந்திய அணியை அனுப்ப மறுத்துவிட்டது. நீண்ட காலமாகவே இந்தியா -பாகிஸ்தான் இடையே நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக ஐசிசி, ஆசிய கோப்பை போன்ற பலதரப்பு போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மறுப்பால் பாகிஸ்தான் ஹைப்ரிட் மாடல் திட்டத்தை முன்மொழிந்தது. ஆனால் இதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் உள்ள எந்த நாடும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் போட்டியை இலங்கைக்கு மாற்ற முடிவு செய்துள்ள நிலையில், இந்தியாவுக்கு பதிலடியாக, ஆசிய கோப்பை மற்றும் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.