PAK vs SL : மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் யாருக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு?
2023 ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதும் அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டியாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி அமைந்துள்ளது. வியாழக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறும் இந்த போட்டியில் வெல்லும் அணி ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும். சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு வங்கதேசத்துடன் ஒரு ஆட்டம் எஞ்சியிருந்தாலும், முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தியதால், முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கும் கொழும்பு மைதானத்தில் மழை முக்கிய பங்கு வகிப்பதால், போட்டி ரத்து செய்யப்பட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மழையால் போட்டி கைவிடப்பட்டால் இறுதிப்போட்டியில் இலங்கை
பாகிஸ்தான் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையேயான சூப்பர் 4 போட்டிக்கு ரிசர்வ் நாள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், மழையால் குறைந்தபட்ச ஓவர்கள் கூட வைத்து விளையாட முடியாமல் முழுமையாக வாஷ் அவுட் செய்யப்பட்டால், பாகிஸ்தானை விட சிறந்த நெட் ரன் ரேட் வைத்துள்ள இலங்கை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். பாகிஸ்தானை பொறுத்தவரை, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு இலங்கை அணியை வீழ்த்துவதே ஒரே வழி என்பதால் பாகிஸ்தானுக்கு இன்று போட்டி நடைபெற்றே ஆக வேண்டும். இதற்கிடையே, ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இறுதிப் போட்டி நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.