ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் போது நடந்தது என்ன? விவரிக்கிறார் அஸ்வின்
ராஜ்கோட்டில், இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின்போது, தனது தாயாருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலையை சமாளிக்க, கேப்டன் ரோஹித் ஷர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் எப்படி உதவினார்கள் என்பதை அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார். ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், தனது தாயார் நோய்வாய்ப்பட்டதைக் கேட்டு நொறுங்கிவிட்டதாக கூறினார். மனைவியிடமிருந்து வந்த செய்தியைக் கேட்டதும், தன்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். மேலும் அவரது அணி வீரர்கள், குறிப்பாக ரோஹித் ஷர்மா மற்றும் ஜெய் ஷா ஆகியோர், தான் வீடு திரும்பவும், நோய்வாய்ப்பட்ட தாயுடன் இருக்கவும் எப்படி உதவினார்கள் என்பதை தற்போது தெரிவித்துள்ளார்.
தனி விமானம் ஏற்பாடு செய்த புஜாரா மற்றும் ஜெய் ஷா
தாயாருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டவுடன், அஸ்வின் சென்னைக்கு ஒரு சார்ட்டர் ஃபிலைட் மூலம் பயணம் செய்தார். இதை ஏற்பாடு செய்தது, சேட்டேஷ்வர் புஜாரா மற்றும் ஜெய் ஷா. அஸ்வினிடம் செய்தியை சொல்வதற்கு முன், ராஜ்கோட்டை பூர்விகமாக கொண்ட சேட்டேஷ்வர் புஜாராவின் உதவியை நாடியுள்ளார் அஷ்வினின் மனைவி ப்ரித்தி. அவர் ஏற்பாடு செய்த சார்ட்டர் விமானத்தில் தான், அஸ்வின் சென்னை விரைந்துள்ளார். அதேநேரத்தில், தான் உடைந்து, செய்வதறியாது திகைத்திருந்த நேரத்தில், ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தன்னை அறையில் வந்து சந்தித்தாகவும், மறுசிந்தனையின்றி, வீட்டிற்குச் சென்று தனது தாயை சந்திக்கும்படி தன்னை சமாதானப்படுத்தியதே ரோஹித் தான் என்றும் அஸ்வின் கூறினார். அதுமட்டுமின்றி, இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் ஒருவரையும் தன்னுடன் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.