மகனின் ஐபிஎல் அறிமுகம் : உருக்கமாக பதிவிட்ட "தந்தை" சச்சின் டெண்டுல்கர்
ஐபிஎல் 2023 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியின் போது அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமானது குறித்து அவரது தந்தை சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், "அர்ஜுன், இன்று நீ கிரிக்கெட் வீரராக உனது பயணத்தில் இன்னொரு முக்கியமான அடி எடுத்து வைத்துள்ளாய். உன் தந்தையாக, உன்னை நேசிக்கும், விளையாட்டின் மீது நாட்டம் கொண்ட ஒருவனாக, விளையாட்டிற்குத் தக்க மரியாதையைத் தொடர்ந்து அளிப்பாய், விளையாட்டும் உன்னை நேசிக்கும் என்று எனக்குத் தெரியும். நீ இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளாய். அதைத் தொடர்ந்து செய்வாய் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் தொடக்கமாகும். ஆல் தி பெஸ்ட்!" என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் விளையாடிய முதல் தந்தை-மகன்
சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் ஐபிஎல்லில் விளையாடிய முதல் தந்தை மற்றும் மகன் எனும் சாதனையை படைத்துள்ளார்கள். சச்சின் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமாகி 2013 வரை அந்த அணிக்காக விளையாடினார். இப்போது, அர்ஜுனும் அதே அணியில் அறிமுகமாகியுள்ளார். சச்சின் ஆறு ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 78 போட்டிகளில் 34.84 சராசரியுடன் 2,334 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையே அர்ஜுன் டெண்டுல்கர் கேகேஆர் அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் 2 ஓவர்கள் பந்துவீசி விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை மற்றும் பேட்டிங் செய்ய வாய்ப்பும் கிடைக்கவில்லை.